சென்னை டி பி ஐ வளாகத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் அன்பழகனுக்கு சிலை அமைக்க தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை டி பி ஐ வளாகத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் அன்பழகனுக்கு சிலை அமைக்க தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் அமைச்சர் அன்பழகனின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை ஒட்டி, பள்ளிக் கல்வி இயக்குனரகம் அமைந்துள்ள டி பி ஐ வளாகத்தில் அவரது சிலை அமைக்கப்படும் என நவம்பர் 30ம் தேதி அரசு அறிவித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை உடையாம்பாளையத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், சாலைகள், நடைபாதைகள் மற்றும் பொது இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சிலைகள் அமைக்க கூடாது என உச்ச நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

மறைந்த தலைவர்களுக்கு சிலைகள் வைத்தால், ஆட்சிக்கு வரும் கட்சிகளும் தங்கள் தலைவர்கள் சிலைகளை அமைக்கும் வகையில் தவறான முன்னுதாரணமாகி விடும் எனவும், தலைவர்களை கவுரவிக்க அவர்கள் பெயரில் நலத் திட்டங்களை துவங்கினால், பொதுமக்களுக்கும் பயனளிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதை விடுத்து சிலைகளை அமைப்பதால் அரசுக்கு செலவு ஏற்படுவதுடன், எதிர்கட்சியினர் மத்தியில் விரோதத்தையும் ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்தில் அன்பழகனுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளதால், டிபிஐ வளாகத்தில் அவரது சிலையை அமைக்க தடை விதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like...