சென்னை பட்டினப்பாக்கம் இல்லத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி;

சென்னை பட்டினப்பாக்கம் இல்லத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி;

மிக்ஜாம் புயல், வெள்ளத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்ட மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்ற தமிழக முதலமைச்சரின் அறிக்கை அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. மிக்ஜாம் புயல் குறித்து போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்காத காரணத்தினால்தான் மக்கள் இந்த அளவு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

வெள்ளம் சூழ்ந்த சாலைகளில் சாக்கடை நீர் கலந்து,இன்று குப்பை கூளங்களாக காட்சி அளிக்கிறது.இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அச்சத்தில் மக்கள் இருக்கிறார்கள்.தற்போது நிலவும் சுகாதார சீர்கேடுகளால், மழைக்குப்பின் வரும் காய்ச்சல்களான ஃப்ளூ,டெங்கு,மலேரியா,டைபாய்டு போன்ற காய்ச்சல்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு தொகுதிகளிலும் தற்போது திமுகவுக்கு வாக்களித்த மக்கள் அனைவரும் ஆத்திரத்தில் இருக்கிறார்கள்.திமுகவுக்கு ஏன் வாக்களித்தோம் என்ற ஆதங்கத்தில் இருக்கிறார்கள்.அமைச்சர்கள் முதல் எம்எல்ஏக்கள் வரை பாதிக்கப்பட்ட மக்கள் அவர்களை முற்றுகையிட்டு கேள்வி எழுப்பும் நிலையை பார்க்கும் பொழுது இது தெரிகிறது.

மிக்ஜாம் புயல், வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதித்து, உடைமைகளை இழந்து தவிக்கும் 4 மாவட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக 6 ஆயிரம் ரூபாய் அறிவித்திருப்பது, யானை பசிக்கு சோளப்பொறி போடுவது போல் உள்ளது. அவற்றை உயர்த்தி 12000 ரூபாயாக வழங்க வேண்டும்.மழை வெள்ளத்தால் பாதித்துள்ள வாகனங்களுக்கு உரிய இழப்பீட்டை அரசு முழுமையாக, இலவசமாக வழங்க வேண்டும். அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.அவர்களுக்கு தேவையான இழப்பீட்டை அரசு இலவசமாக வழங்க வேண்டும்.

சென்னை மாநகராட்சியில் மழை நீர் வடிகால்வாய் அகலப்படுத்தும் பணிக்காக நான்காயிரம் கோடி ரூபாய் செலவானது என்று திமுக அரசு சொல்லி வந்தது. திடீரென 5 ஆயிரத்து நூற்று பன்னிரண்டு கோடி ரூபாய் ஒதுக்கியதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என் நேரு கூறுகிறார்.அதில், 3 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தற்போது செலவு செய்திருப்பதாக கூறுவதை பார்க்கும் பொழுது, 45 முதல் 50 சதவீத பணிகள் தான் செய்து முடித்திருக்க முடியும். ஆனால், தமிழக முதலமைச்சர் 90 சதவீத பணிகள் முழுமை அடைந்திருப்பதாக கூறுகிறார். இதை எல்லாம் பார்க்கும் பொழுது, எந்த அளவுக்கு மாறி மாறி அமைச்சர்களும் தமிழக முதலமைச்சரும் மக்களிடையே பேசி வருகிறார்கள் என்பதை முழுமையாக புரிந்து கொள்ள முடியும்.

சென்னையை பொருத்தவரை வடிகால்வாய் பணிகளுக்கு ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர்களுக்கு முழுமையாக பணம் கொடுக்காததால் அவர்கள் பணியை ஆங்காங்கே முடிக்காமல் நிறுத்தியுள்ளதாக தெரிகிறது.

மூளை இல்லாத, அறிவில்லாத அரசு ஒன்று இந்த உலகில் செயல்படுகிறது என்றால் அது இந்த விடியா தி.மு.க அரசுதான்.

நான்காம் தேதி வீசிய மிக்ஜாம் புயல் ஆந்திரா அருகே கரையை கடப்பதற்கு பதிலாக, சென்னை அருகே கரையை கடந்து இருந்தால் நரியின் (திமுக) சாயம் வெளுத்து இருக்கும். அதன் மூலம் ஒட்டுமொத்த மக்களின் கோபமும் வெளிப்பட்டிருக்கும்.
வெள்ள பாதிப்புகளை மக்கள் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகவே மின் இணைப்புகளை துண்டித்தும், இணைய சேவைகளை துண்டித்தும் ஊடகங்களையும், இணையதள சேவைகளையும் திமுக அரசு முடக்க நினைத்தது.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கித் தவித்த குடியிருப்பு வாசிகளை மீட்டு வர அதிக அளவில் படகுகளை இயக்கவில்லை.கழக ஆட்சியில் மீனவர்களை களம் இறக்கியது போல், திமுக அரசு மீனவர்களை பயன்படுத்தாதது ஏன்?
நிவாரண நிதியை வங்கியில் செலுத்துவதற்கு போதிய வழிமுறைகள் உள்ள போது,அவற்றை வங்கிக் கணக்கில் செலுத்தாதது ஏன்?

மழை வெள்ளத்தால் எண்ணூர் அருகே கச்சா எண்ணெய் கடலில் கலந்து விட்டது. இதனால் கடல் மாசுபட்டு கடல் வாழ் உயிரினங்களும், மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிப்புகள் குறித்து கணக்கெடுத்து உரிய இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும்.

மிக்ஜாம் புயல் பாதிப்பால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்ட மக்களை விடியா திமுக அரசு கையேந்த வைத்துவிட்டது. புயல் கரையை கடந்து ஐந்து நாட்கள் ஆகியுள்ள நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் மக்கள் இன்னும் இருட்டில் தவித்து வருகிறார்கள்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

You may also like...