சைனிக்’ பள்ளிகளை தரம் வழக்கு cj order

தமிழகத்தில் உள்ள ‘சைனிக்’ பள்ளிகளை தரம் உயர்த்தக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய ராணுவத்தில் திறமையான வீரர்களை தயார்படுத்த 28 மாநிலங்களில் ‘சைனிக்’ பள்ளிகள் (மாணவர் படைத்துறை பள்ளி) தொடங்கப்பட்டது.

தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 1962ம் ஆண்டு தொடங்கப்பட்ட சைனிக் பள்ளி, பின்னர் திருப்பூர் மாவட்டம் அமராவதி நகருக்கு மாற்றப்பட்டது. இந்த பள்ளியில் படித்த 700 பேர் இந்திய ராணுவ அதிகாரிகளாக பணியாற்றி வருகின்றனர்.

இந்த பள்ளியில் 6 மற்றும் 9ம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு ஒரு முறை நுழைவு தேர்வு அமலில் இருந்தது. 2008ம் ஆண்டுக்கு பின் இரு முறை நுழைவு தேர்வு எழுதும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

முன்பு சென்னை, திருநெல்வேலி, மதுரை, திருச்சி உள்ளிட்ட 6 இடங்களில் நடத்தப்பட்ட நுழைவுத்தேர்வு தற்போது அமராவதி நகரில் மட்டுமே நடத்தப்படுகிறது.

தமிழக மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்ட அமராவதி சைனிக் பள்ளியில், வெளி மாநில மாணவர்களுக்கு 33 சதவீதம் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும், பள்ளிக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பந உள்ளிட்ட கோரிக்கைகளுடன், கொடைக்கானல் தாலுகா பூலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஏ.ஆர்.கோகுலகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், இந்திய ராணுவத்திற்கு திறமையான வீரர்களை அனுப்பும் சைனிக் பள்ளிகளின் மேம்பாட்டுக்கு எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை. அஜ்மீர், பெங்களூர், பெல்காம், சால் மற்றும் தோல்பூரில் உள்ள ராஷ்டிரிய ராணுவ பள்ளிகளுக்கு மட்டும் மத்திய அரசு அதிக அக்கறை காட்டுகிறது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பள்ளிக்கான நுழைவுத் தேர்வை ஒரு முறை மட்டுமே எழுதும் பழைய நடைமுறைப்படுத்த வேண்டும். சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் நுழைவுத் தேர்வை மீண்டும் நடத்தவேண்டும்.
மாணவர் சேர்க்கையில் பிற மாநில ஒதுக்கீடு முறையை ரத்து செய்யவேண்டும். தேசிய ராணுவ அகாடமியின் அதிகாரிகளைக்கொண்டு மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களை கற்றுத் தரவேண்டும். பள்ளிக்கு உரிய நிதியை ஒதுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 2ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

You may also like...