நீதிபதி எம்.தண்டபாணி அதிரடி உத்தரவு

நீதிமன்றத்தால் ஏலம் விடப்பட்ட நிலத்தை ஏலம் எடுத்தவருக்கு மீட்டு தர உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சிதம்பரம் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற சிதம்பரத்தை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்பவர், நீதிமன்றத்தால் ஏலத்திற்கு விடப்பட்ட ஒரு ஏக்கர் 30 சென்ட் நிலத்தை கடந்த 1980ம் ஆண்டு வாங்கியிருந்தார்.

நிலத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரச் சென்ற போது, அந்த நிலத்தில் வீடுகட்டி குடியிருப்பவர்கள் அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது என்று கூறி காலி செய்ய மறுத்துள்ளனர்.

இதையடுத்து, முத்துக்கிருஷ்ணன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சிதம்பரம் முன்சீப் நீதிமன்றம், நிலத்தில் குடியிருப்பவர்களை காலி செய்ய உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து குடியிருப்புவாசிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சிதம்பரம் சார்பு நீதிமன்றம், முன்சீப் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்தும், சிதம்பரம் முன்சீப் நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்யவும் கோரி முத்துகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.வீரராகவன், நீதிமன்றத்தால் ஏலம் விடப்பட்ட நிலத்தை மனுதாரர் வாங்கியுள்ளார். ஆனால், அந்த இடத்தை காலி செய்ய அங்கு குடியிருப்பவர்கள் மறுத்துள்ளனர். அந்த நிலத்தை ரத்தனவேல் நாடார் என்பவரிடம் குத்தகைக்கு வாங்கி 30 ஆண்டுகளாக குடியிருப்பதாக தெரிவிக்கிறார்கள். எந்த எழுத்துபூர்வமான ஒப்பந்தமும் போடப்படவில்லை. அவர்களுக்கு இந்த நிலத்தின் உரிமையை கோர அதிகாரம் இல்லை என்று வாதிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த குடியிருப்போர் தரப்பு வழக்கறிஞர் முத்துக்குமார், குடியிருந்தவர்களில் பலர் மரணமடைந்துவிட்டனர். அவர்களின் வாரிசுகளை வழக்கில் சேர்க்காமல் முன்சீப் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிலம் இனாம் நிலம். அதில் குடியிருக்க எதிர் மனுதாரர்களுக்கு உரிமை உள்ளது என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இனாம் நிலமாக இருந்தால் பட்டா வழங்கியிருக்க முடியாது. ரயத்வாரி நிலங்கள், விவசாய நிலங்கள் என்பதால் அதனை விவசாய பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். குடியிருப்புகளை கட்ட முடியாது. ரயத்வாரி நிலத்திற்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது என்பதை ஏற்க முடியாது எனக் கூறி, முத்துகிருஷ்ணனிடம் நிலத்தை ஒப்படைக்கும்படி, சிதம்பரம் முன்சீப் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு உறுதி செய்து உத்தரவிட்டார்.

You may also like...