தகுதி தேர்வு தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன்,மற்றும் நீதிபதி முகமது ஷபிக் order

தமிழகத்தில் 2222 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான நேரடி தேர்வு முறையில் இருந்து 400 பணியிடங்களை காலியாக வைப்பது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன்,மற்றும் நீதிபதி முகமது ஷபிக் அமர்வில் நிலுவையில் இருந்து வருகிறது.

2013ஆம் ஆண்டில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேரடியாக நியமனம் வழங்க வேண்டும் என்றும் போட்டி தேர்வுகள் நடத்த கூடாது என்றும். தொடரப்பட்ட வழக்குகள் மாற்றும் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க கூடாது என்ற நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஆகியவை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கவிதா ரமேஸ்வர், தற்போது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் 2222 பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு அறிவிப்பை வெளியிட்டதாகவும், அவர்கள் போட்டி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்க படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அந்த அறிவிப்பனையை தாங்கள் எதிர்க்கவில்லை என்றும் ஆனால் 2013 ஆம் ஆண்டில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 400பேர் கடந்த 10ஆண்டுகளாக காத்திருப்பதாக குறிப்பிட்டார். அவர்களுக்கு போட்டி தேர்வு நடத்தாமல் நேரடியாக நியமனம் செய்ய வேண்டும் என்றும் அவர்களை தனி பிரிவாக கருத வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.

பள்ளிக்கல்வி துறை சார்பில் ஆஜரான அரசு தரப்பு கூடுதல் தலைமை வழக்கறிஞர் சிலம்பண்ணன், தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பானது உயர்நீதிமன்ற இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டதே என்றும், அனைவரையும் சமமாக தான் பாவிக்கமுடியும் என்றும் குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் இந்த 400 பேரையும் தனி பிரிவாக கருதி பணியிடங்களை காலியாக வைக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த அரசு தரப்பு கூடுதல் தலைமை வழக்கறிஞர், இது தொடர்பாக அரசிடம் ஆலோசித்து மனுவாக தாக்கல் செய்ய உள்ளதாகவும்,இல்லையென்றால் இந்த வழக்கில் வாதிட தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் ஆஜரான அரசு கூடுதல் வழக்கறிஞர் ஆர் நீலகண்டன்,
2222 பணியிடங்கள் என்பது உத்தேசமான எண்ணிக்கை தான் என்றும் தேவைப்படும் போது அது அரசு மாற்றியமைக்கும் என்றும் தெரிவித்தார்.

அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை 10ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.மேலும் அன்றைய தினம் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளரை நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், 400பேரை மட்டும் போட்டி தேர்வு நடத்தாமல் தனி பிரிவாக கருதி காலியாக வைப்பது குறித்து தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு விசாரணையின் போது, மூத்த வழக்கறிஞர் காந்திமதி ஆஜராகி போட்டி தேர்வு நடத்துவது தொடர்பான அரசாணை 149ஐ எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் அந்த வழக்கு வரும் திங்கட்கிழமை தனி நீதிபதி முன்பாக விசாரணைக்கு வரவுள்ளது என்றும் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த நீதிபதிகள் அந்த வழக்கை தனி நீதிபதி முன்பே நடத்தி கொள்ளுங்கள் என்று தெரிவித்தனர்.

You may also like...