நேர்மையான வழக்கறிஞர்களே பார் கவுன்சில் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள, சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி எஸ். வைத்தியநாதன் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி எஸ்.வைத்தியநாதனை மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த நீதிபதி எஸ்.மணிக்குமார் கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட பிறகு, அவருக்கு அடுத்தபடியாக நேரடியாக மற்றொரு உயர் நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தின் சார்பில் நீதிபதி வைத்தியநாதனுக்கு வழி அனுப்பு விழா நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், கடந்த 2013 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியை துவங்கிய வைத்தியநாதன் இதுவரை 67 ஆயிரம் வழக்குகளில் விசாரித்து தீர்வு கண்டுள்ளார் என்றும், அவருடன் 74 நீதிபதிகள் அமர்ந்து வழக்குகளை விசாரித்து இருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

ஏற்பு உரையாற்றிய நீதிபதி வைத்தியநாதன், மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக செல்வது மகிழ்ச்சியாக இருந்தாலும், இந்த பாரம்பரிய கட்டிடத்தில் பணியாற்றுவது முடிவுக்கு வருவது வருத்தமாக உள்ளது என்று குறிப்பிட்டார்.

நேர்மையான வழக்கறிஞர்களே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலின் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற வலியுறுத்திய நீதிபதி வைத்தியநாதன், முன்பு சமூகத்தில் வழக்கறிகளுக்கு இருந்த மதிப்பு தற்போது இருக்கிறதா என்பது மில்லியன் டாலர் கேள்விதான் என்று குறிப்பிட்டார்.

மேலும் மோட்டார் வாகன விபத்து வழக்குகளிலும், குடும்ப நலன் சார்ந்த வழக்குகளிலும் வழக்கறிஞர்கள் தங்கள் கட்சிக்காரர்களுக்கு நல்லதை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

You may also like...