Madras high court orders sep 14 eps tender actor news

 

[9/15, 06:31] Sekarreporter1: தலைமறைவான நடிகை மீரா மிதுன் பெங்களூருவில் தஞ்சமடைந்து இருப்பதாகவும், அவரை விரைந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாகவும் காவல் துறை தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை வெளியிட்டதாக, நடிகை மீரா மிதுன் மீதும், உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர்.

பின்னர் ஜாமீனில் விடுதலையான இவர்களுக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 6 ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மீரா மீதுன் ஆஜரகாததால், அவருக்கு எதிராக ஜாமீனில் வெளி வர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்து முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன் விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை தரப்பில், நீதிமன்ற உத்தரவின்படி மீராமிதுனை வேளச்சேரி மற்றும் சேத்துப்பட்டில் தேடியும் கிடைக்கவில்லை எனவும், அவர் பெங்களூருவில் இருப்பதாக தெரிய வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், விரைவில் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதி, வழக்கின் விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளார்.
[9/15, 06:31] Sekarreporter1: டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் விதிக்கப்பட்ட மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம், அக்டோபர் 17ஆம் தேதி தள்ளிவைத்துள்ளது.

நிலப் பிரச்னை தொடர்பாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா, கடந்த 2013 ஆண்டு செப்டம்பர் மாதம் பட்டப்பகலில் வெட்டப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

இந்த கொலை வழக்கில், அரசு ஆசிரியர் பொன்னுசாமி, அவரின் மகன்களான வழக்கறிஞர் பாசில்,
என்ஜினீயரான போரிஸ் மற்றும் வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், என்ஜினீயர் முருகன், செல்வபிரகாஷ் ஆகிய ஏழு பேருக்கு மரண தண்டனையும், பொன்னுசாமியின் மனைவி மேரி புஷ்பம் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து, கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பொன்னுசாமி, பாசில், போரிஸ், வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார் உள்ளிட்ட ஏழு பேருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்ய கோரி விசாரணை நீதிமன்றம், வழக்கு தொடர்பான விபரங்களை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்தது.

இதேபோல, ஏழு பேரும் மரண தண்டனையை எதிர்த்தும் மேல் முறையீடு செய்திருந்தனர். ஆயுள் தண்டனையை எதிர்த்து மேரி புஷ்பம் மற்றும் ஏசுராஜன் ஆகியோரும் மேல் முறையீடு செய்திருந்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஆர்.எம்.டி.டீக்காராமன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தன. அப்போது, அரசு குற்றவியல் தலைமை வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, வாதத்தை தொடங்க தயாராக இருப்பதாக கூறினார்.

தண்டிக்கப்பட்டவர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரும், பாட்னா உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியுமான அஞ்சனா பிரகாஷ், இந்த வழக்கில் ஆஜராக தம்மை புதிதாக நியமித்துள்ளதால் வழக்கு விவரங்களை படிக்க வேண்டியுள்ளதால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நீதிபதிகள் , எத்தனை முறைதான் விசாரணையை ஒத்திவைப்பது என கேள்வி எழுப்பினர்.

ஒவ்வொரு முறை வழக்கு விசாரணைக்கு வரும் போது டில்லி, மும்பை, கவுஹாத்தியிலிருந்து வழக்கறிஞர் வருகிறார், அதற்காக தள்ளிவைக்க வேண்டுமென கேட்பதாகவும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

இவ்வாறு தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டால் பாதிக்கப்பட்டவருக்கு யார் பதில் சொல்வது எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதனையடுத்து வழக்கின் இறுதி விசாரணையை அக்டோபர் 17ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், எந்த காரணத்தை கொண்டும் இனி வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்படாது என திட்டவட்டமாக கூறினர்.
[9/15, 06:31] Sekarreporter1: எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக விஜிலென்ஸ் கமிஷனர் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில், தமிழகத்தில் நெடுஞ்சாலை பணிகளை மேற்கொள்ள டெண்டர் ஒதுக்கீட்டில் 4,800 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றாக கூறி 2018ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யக் கோரி, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான இந்த புகாரை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், எடப்பாடிக்கு பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு புகாரை சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. அத்துடன் இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரிக்கவும் உத்தரவிட்டது.

இந்நிலையில், ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு துறை ஆரம்பகட்ட விசாரணை நடத்தியுள்ளதால், அவர்களே விசாரணையை தொடரட்டும் எனத் தெரிவித்து, மனுவை திரும்பப் பெற்றுக் கொள்ள ஆர்.எஸ்.பாரதி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ அனுமதி கோரினார்.

ஆனால் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர் கவுதம், பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரினார்.

லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, ஏற்கனவே இந்த புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை ஆரம்பகட்ட விசாரணை நடத்தி, விஜிலென்ஸ் கமிஷனருக்கு அறிக்கை அளித்துள்ளதாகவும், விஜிலென்ஸ் கமிஷனர் அறிக்கையின் அடிப்படையில் விசாரணையை தொடர்வது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர், வழக்கில் பதில்மனு தாக்கல் செய்யும் வரை, லஞ்ச ஒழிப்புத் துறையின் ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையின் மீது விஜிலென்ஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்காத வகையில் தற்போதைய நிலையே நீடிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, எந்த ஒரு தடை உத்தரவும் பிறப்பிக்க கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, மனு மீதான விசாரணையை செப்டம்பர் 26ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
[9/15, 06:31] Sekarreporter1: நடிகர் சிம்பு நடித்து நாளை வெளியாக உள்ள வெந்து தணிந்தது காடு படத்தை வெளியிட தடை கோரிய வழக்கில் இரு தரப்பினருக்கும் இடையில் சமரசம் ஏற்பட்டுள்ளதால், படம் வெளியாவதற்கு எந்த தடையும் இல்லை.

நடிகர் சிம்பு நடித்து இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் நாளை வெளியாக உள்ளது.

இந்த படத்துக்கு தடை விதிக்க கோரி ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகர் சிம்பு நடிக்க சூப்பர் ஸ்டார் என்ற பெயரில் படத்தை தயாரிக்க இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு முன் பணமாக 2 கோடியே 40 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்களிடம் கூறிய அதே கதையை வெந்து தணிந்தது காடு என்ற பெயரில் படமாக எடுத்து, நாளை வெளியிட இருப்பதாகவும், தங்களுக்கு தரவேண்டிய இரண்டு கோடியே 40 லட்சம் ரூபாய் பணத்தை தராமல் படத்தை வெளியிட கூடாது என தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்த போது மனுதாரர் தரப்பில், 2018ம் ஆண்டு ஒப்பந்தத்தை மீறி எடுக்கப்பட்டுள்ள வெந்து தணிந்தது காடு படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

கவுதம் வாசுதேவ் மேனன் தரப்பில் , ஒப்பந்தம் செய்தது உண்மைதான் என்றும் அடுத்த படத்தை இயக்கும் முன் மனுதாரருக்கு வழங்க வேண்டிய பணத்தை திருப்பி வழங்கி விடுவதாகவும், இது சம்பந்தமாக மனுதாரருடன் சமரசம் செய்து கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சமரசம் செய்து கொள்ள மனுதாரர் தரப்பில் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, பணத்தை திருப்பி கொடுப்பது தொடர்பான உத்தரவாதத்தை பதில் மனுவாக தாக்கல் செய்யும்படி கவுதம் வாசுதேவ் மேனன் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, மனு மீதான விசாரணையை செப்டம்பர் 21ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்

இதனால் நாளை இந்த படம் வெளியாவதில் எந்த சிக்கலும் இல்லை.

You may also like...