தமிழ.வழக்காடு மொழி நீதிபதி jayachandren அடுக்கடுக்கானகேள்வி

தமிழை வழக்காடு மொழியாக மாற்றுவதற்கான ஆக்கப்பூர்வமான பணிகளை செய்யாமல் ஆதங்கப்படுவதில் பலன் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் பகவத் சிங் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வலியுறுத்தி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது மெரினாவில் திருவள்ளுவர் சிலை அருகே டிசம்பர் 20ம் தேதி முதல் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இதற்கு அனுமதிக் கோரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் விண்ணப்பித்ததாகவும், அந்த கோரிக்கை  நிராகரிக்கப்பட்டுள்ளதால், தங்களுக்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ் வழக்காடு மொழியாக வேண்டுமென்ற மனுதாரரின் எண்ணத்தை பாராட்டுவதாக கூறிய நீதிபதி, ஆனால் அதற்கு இது போன்ற உண்ணாவிரதம் இருப்பது சரியான செயல் இல்லை என தெரிவித்தார்.

சட்ட மொழிகளுக்கு ஏற்ப தமிழ் மொழியில் சரியான சொற்களை கண்டறிய வேண்டுமென தெரிவித்த நீதிபதி, அதேபோல ஆங்கிலத்தில் உள்ள சட்ட புத்தகங்களை எளிமையான தமிழில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் மொழிப்பெயர்க்க வேண்டுமெனவும் கூறினார்.

தமிழை வழக்காடு மொழியாக மாற்றுவதற்கான ஆக்கப்பூர்வமான பணிகளை செய்யாமல் ஆதங்கப்படுவதில் பலன் இல்லை என்றும், நீதிமன்ற தீர்ப்புகளை மொழிபெயர்க்க நிதி ஒதுக்குவது மட்டும் போதாது எனவும், அடிமட்ட அளவில் அதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் நீதிபதி கூறினார்.

இதனையடுத்து, போராட்டத்திற்கு அனுமதி அளிப்பது குறித்து காவல்துறையின் நிலைப்பாடு என்ன என நீதிபதி கேள்வி எழுப்பியபோது, சாகும்வரை உண்ணாவிரதம் போன்றவைகளுக்கு அனுமதி அளிக்க முடியாது என காவல்துறை விளக்கம் அளித்தது.

வேறு எந்த மாதிரியான போராட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை நாளை மறுநாளுக்கு (20ம் தேதிக்கு) ஒத்திவைத்தார்.

You may also like...